AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : வாற்கோதுமைக் கள்
இசை : சத்யா
இயக்கம் : துரை
__________________
வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
நாற்காலிகள் மேசைகள்
நாள்தோறுமே தேய்த்தோமே
மேற்கூரையாய் வானம் நேசிக்கலாம்
கோப்புகளோடு கொட்டிய குப்பை
கோப்பைகள் முட்டி மறந்திடுவோம்!
பகலிரவைந்தும் நிகழ்த்திய தப்பை
ஓரிரு நாட்கள் துறந்திடுவோம்!
தோள்கள் உரசிப் பேசிக் கிடக்க
வாரக் கடைசி வந்ததடா!
செல்லிடப்பேசி மூடி அணைக்க
வாரக் கடைசி வந்ததடா!
வாற்கோதுமைக் கள்
சோர்வோயவே கொள்
_____________________
விரிவுரை எல்லாம் வரிவரியாக
எழுதி விரலும் தேய்ந்ததே
அறிவுரை கேட்டு சரிசரிசொல்லி
வறண்டு குரலும் காய்ந்ததே
தேயும் நிலவென
புன்னகையும் சுருங்கி
யானை மிதிபடும்
அப்பளமாய் நொறுங்கி
ஞானம் பிறக்க ஞாலம் சிறக்க
வாரக் கடைசி வந்ததடா
மேற்கில் பறக்க ரெக்கை விரிக்க
வாரக் கடைசி வந்ததடா
_______________________
சங்கை ஊதித் திங்கள் வந்தது
ஜவ்வாய் மாறிச் செவ்வாய் வந்தது
பூதம் போலொரு புதனும் வந்திடும் செல்லும்
வியாதித் தீயென வியாழன் வந்ததும் கொல்லும்
கவலைக்கிடமாய் நிலமை நிலமை
தொடரும் தொடரும் தொடரும் தொடருமே
வெள்ளிக்கிழமை வந்தால் ஏனோ
உள்ளம் உச்சம் துள்ளுதோ?
யார் கையிலே யார் பையிலே
இன்னும் மிச்சம் உள்ளதோ…
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
_________________________
புத்தகம் எல்லாம்
மூளை திணித்தே
மந்தையில் ஆடாகினோம்
ஆந்தைகள் போலே
கண்கள் விழித்தே
மண்டையில் சூடாகினோம்
நுரையீரல் எல்லாம்
வகுப்பறை வாசம்
அதை நீக்கத் தானே வழி தேடினோம்
நுனிநாக்கும் தானாய்
ஆங்கிலம் பேசும்
அதைப் போக்கத் தானே தமிழ் பாடினோம்
நிலவோடு கரைகள் குறையில்லை என்றே
அளவோடு ஏதும் பிழையில்லை என்றே...
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
___________________________